Friday 19 April 2013

ஹிருதயாலய மருதப்பத் தேவர் பற்றி சாமிநாதையர்

என் பிரயாணங்களும் ஆராய்ச்சியும் விரிய விரிய என் தமிழ்க்குடும்பமும் தமிழ்நூற் செல்வமும் அதிகமாயின. அவற்றைப் பாதுகாப்பதற்குப்
போதிய வசதி அவசியமாயிற்று. நான் இருந்த வீட்டில், மேலும் மேலும் நான் கொணர்ந்து சேர்க்கும் ஏட்டுச் சுவடிகளை வைப்பதற்கும், அன்பர்களுடன் இருந்து ஆராய்ச்சி செய்வதற்கும் இடம் போதவில்லை. ஆதலால் 1891-ஆம் வருஷம் ஜு ன் மாதம் முதல் முன்பிருந்த பக்தபுரி அக்கிரகாரத்திலேயே வடவண்டைக் கோடியிலுள்ள ஒரு மெத்தை வீட்டை மாதம் ரூ.6 வாடகைக்குப் பேசி அதிலே இருந்து வரலானேன்.

புதிய வீட்டுக்கு வந்தவுடன் நல்ல சுவடிகளை மேலும் தேடித் தொகுக்கலாமென்றும் பல மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லலாமென்றும்
பலரை வைத்துக் கொண்டு தமிழாராய்ச்சி செய்யலாமென்றும் என் யோசனை விரிந்தது.

என் குமாரனுக்கு உபநயனம் நடைபெற்றபோது பல கனவான்கள் பலவகையான உதவிகள் செய்தனர். அவர்களுள் ஊற்றுமலை ஜமீன்தாராகிய
ஹிருதயாலய மருதப்பத் தேவரும் ஒருவர். அவரைப் பார்த்துப் பேசிப் பழகவேண்டுமென்ற விருப்பம் எனக்கு நெடுநாளாக இருந்தது. திருநெல்வேலிப் பக்கங்களில் பிரயாணம் செய்த போதெல்லாம் அப்படியே ஊற்றுமலை போய்ப் பார்க்க எண்ணியிருந்தும் முடியவில்லை. ஊற்றுமலைக்குப் போவதையே முக்கிய நோக்கமாக வைத்துக் கொண்டு புறப்பட்டாலொழிய அந்தக் கருத்து நிறைவேறாதென்று தோன்றிற்று.
ஆதலால் மிதிலைப்பட்டியிலிருந்து வந்த சில நாட்களுக்குப் பிறகு ஊற்றுமலையை நோக்கிப் புறப்பட்டேன்.

விக்கிரமசிங்கபுரம்

அச்சமயம் நான் ஏடு தேடாத இடங்களுக்கும் சென்று பார்த்து வரலாமென்று எண்ணியே புறப்பட்டேன். ஆகையால் நேரே விக்கிரமசிங்கபுரம்
சென்றேன். சிவஞான போதத்திற்குத் திராவிட மகாபாஷ்யம் இயற்றிய திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான முனிவர் உதித்த அவ்வூரில் அவர் பிறந்த வீடு இருக்கிறது. அங்கே எனக்கு உபயோகப்படும் நூல்கள் எவையேனும் கிடைக்கலாமென்று நினைத்தேன். போய்ப் பார்த்தபோது ஒன்றும் கிடைக்கவில்லை.

அவ்வீட்டில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் அவ்வூர்ப் பள்ளிக் கூடத்து உபாத்தியாயர். அவரை எந்த ஊரென்று விசாரித்தபோது, “கடையநல்லூர்” என்று சொன்னார்.

“அப்படியா? சந்தோஷம். உங்கள் வீட்டிலே பழைய தமிழ் ஏட்டுச் சுவடிகள் உண்டா?” என்று கேட்டேன்.

வீண் அபவாதம்

“மிகுதியாக இருந்தன. எல்லாவற்றையும் ஒருவர் கொண்டு போய் விட்டார்” என்று அவர் சொன்னார்.

“யார் அவர்?” என்று மிக்க ஆவலோடு கேட்டேன்.

“கும்பகோணம் சாமிநாதையர் கொண்டு போய் விட்டார்” என்றார் அவர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

“அவர் என்ன சுவடிகளைக் கொண்டு போனார்?” “எவ்வளவோ சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் அவர் கொண்டு போய் விட்டார்.”
அவருக்கு என்னை இன்னாரென்று தெரியாது.

அங்கே என்னுடனிருந்த அன்பர்கள் ஒன்றும் விளங்காமல் விழித்தார்கள். இந்த அபவாதம் இன்னும் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகவே நான் மேலும் மேலும் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் தம் வீட்டில் பல அருமையான ஏடுகள் இருந்தனவென்றும் அவற்றை நான் கொண்டு போய்விட்டதாகவும் உறுதியாகச் சொன்னார். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மற்ற அன்பர்களுக்கு விஷயம் விளங்க வேண்டுமென்றெண்ணிச் சொல்லத் தொடங்கினேன்.

‘இவர் என்னைத் தெரிந்து கொள்ளாமல் வீணான அபவாதம் சுமத்துகிறார். நான் கடையநல்லூருக்குப் போனதுண்டு. இவர் வீட்டில் ஏடு தேடியதும் உண்டு. ஆனால் இவர் சொல்லுவதுபோல அங்கே கணக்கில்லாத ஏட்டுச் சுவடிகளை நான் காணவில்லை. அவ்வூருக்குப் போனவுடன் இவர் வீடு ஒரு வித்துவான் வீடென்று தெரிந்து போய் விசாரித்தேன். வீட்டில் இருந்தவர், ‘ஏடுகளெல்லாம் மச்சில் இருக்கின்றன’ என்றார். மேலே ஏறிப் பார்த்தேன். இரண்டு மூன்று பெட்டிகள் இருந்தன. பல காலமாகக் கவனிக்கப்படாமல் இருந்தவையென்று அவற்றைப் பார்த்தவுடனே தெரிந்தது. ஒரு பெட்டியைத் திறந்து கை வைத்தேன். எலிப் புழுக்கை மயமாக இருந்தது. எலி தமிழ் நூலை உண்டு ஜீரணித்தது போக, விட்டு வைத்த துண்டுகளே அப்புழுக்கையோடு இருந்தன. அந்தப் பெட்டிகளிலுள்ள சிதைந்த சுவடிகளையும் துண்டுகளையும்
எடுத்துத் தட்டிக் கொட்டிப் பார்த்தபோது அபூர்த்தியான சிந்தாமணி ஏடு மாத்திரம் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டேன். அந்தப் பெட்டிக்குள்
இருந்த வேறு பதார்த்தங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். உண்மை இதுதான்!”

இவ்வாறு சொல்லி விட்டு, “நீங்கள் அப்போது அங்கே இருந்தீர்களா?” என்று அந்த உபாத்தியாயரைக் கேட்டேன். சோர்ந்த முகத்தோடு அவர்,
“நான் தெரியாமல் சொல்லி விட்டேன். நான் அப்பொழுது அங்கே இல்லை. விடுமுறைக்கு ஊர் போயிருந்தபோது என் வீட்டில் இருந்தவர்கள் அப்படிச் சொன்னார்கள்” என்றார்.

“நல்ல வேளை. இந்த அபவாதத்தை என்னிடம் சொன்னதால் உண்மை எல்லோருக்கும் விளங்கியது. வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால் நீங்கள் சொல்லுவதை உண்மையாகவே எண்ணியிருப்பார்கள். நான் பிழைத்தேன்” என்றேன்.

பிறகு விக்கிரமசிங்கபுரத்திலிருந்து ஒரு வண்டி வைத்துக் கொண்டு ஊற்றுமலைக்குப் போனேன்.

தோற்றம்





வண்டி ஊற்றுமலையை அணுகியபோது எதிரே சாலையில் ஒரு சிறுபடை வந்தது. அதைக் கண்டவுடன் என்னுடன் வந்த ஒருவர், “அதோ,
ஜமீன்தார் வருகிறார்” என்றார். நான் உடனே வண்டியை நிறுத்தச் செய்து கீழிறங்கினேன்.

நான் இறங்கியவுடன், “மிகவும் சந்தோஷம். தங்களை வரவேற்கத்தான் இந்த வழியாக வருகிறேன்” என்று ஒரு கம்பீரமான தொனி கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் வேட்டைக் கோலத்தில் ஒரு வீரர் நின்றார் சுற்றிலும் பார்த்தேன். அவரைச் சூழ்ந்து ஆயுதபாணிகளாகிப் பல மறவர்கள் மிக்க வணக்கத்தோடு நின்றார்கள். பல நாய்கள் உடன் வந்தன. ‘நம்மை வரவேற்கவா இந்த வேட்டைக் கோலத்தோடு வந்திருக்கிறார். இவர் பழங்காலத்து வீரரைப் போலவல்லவோ இருக்கிறார்?” என்று எண்ணினேன். என் கண்கள் அவருடைய தோற்றத்தில் ஈடுபட்டு அடி முதல் முடி வரையில் நோக்கின. அவருக்கு அப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் இருக்கும்.

“அவ்விடத்தில் சிரமம் வைத்துக் கொள்வானேன்? நான் அரண்மனையிலே வந்து கண்டிருப்பேனே” என்று புன்னகையுடன் சொன்னேன்.

“நீங்கள் வருவதாக எழுதியது முதல் ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் நேரே அரண்மனைக்குச் செல்லுங்கள். சிறிது தூரம் போய் வந்து விடுகிறேன்” என்று சொல்லி அவர் புறப்பட்டார்.

நான் அரண்மனையை அடைந்தேன். எனக்கு மிகவும் வசதியுள்ள ஜாகை ஹஜார வாசலின் மெத்தையில் அமைத்திருந்தார்கள். போனவுடன்
ஸ்நானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. பிறகு சிற்றுண்டிகளுடன் காபியும் கிடைத்தது. எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு
எட்டு மணிக்கு ஆஸ்தானத்துக்குப் போனேன். அங்கிருந்த ஜமீன்தார் என்னைக் கண்டவுடன் எழுந்து, “இருக்க வேண்டும்” என்று உபசரித்தார்.
அவ்விடத்தில் நான்கு புலவர்கள் உடன் இருந்தனர். முத்துவீரப் புலவர், அண்ணாமலைப் புலவரென்று இருவர் பெயர்கள் மாத்திரம் ஞாபகம்
இருக்கின்றன. நான் அமர்ந்தேன்.

தமிழ்ப் பயிற்சி

ஜமீன்தார் அந்த நான்கு புலவர்களுடன் திருவானைக்காப் புராணம் படித்துக் கொண்டிருந்தார். எனக்கு அவர் சிலசமயங்களில் சில தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் தெரிவிக்கும்படி கடிதங்கள் எழுதியதுண்டு. அந்தச் செய்யுட்கள் கடினமானவையாகவும் பாடம் கேட்டவர்களுக்கல்லாமல் ஏனையோருக்கு எளிதில் விளங்காதனவாகவும் இருக்கும் “ஒரு ஜமீன்தார் இப்படிக் கடினமான செய்யுட்களைத்
தேர்ந்தெடுத்துச் சந்தேகம் கேட்கிறாரே. மற்றச் செய்யுட்களெல்லாம் விளங்கிவிட்டனவா? அவற்றைப் படிக்கிறாரா?” என்று சிந்தனை செய்வேன். நேரிலே ஜமீன்தார் புலவர்களோடு இருந்து தமிழ் நூல்களைப் படித்து இன்புறுவதைக் கண்டபோது அவருடைய தமிழ்ப் பயிற்சியின் அளவை ஊகித்துக் கொண்டேன்.

ஒரு புலவர் ஒரு பாடலைப் படித்தார். உடனே மருதப்பத் தேவர், “உத்தரவாக வேணும்” என்று என்னை நோக்கிக் கூறினார். நான்
ஸ்தம்பித்துவிட்டேன். அவருடைய பேச்சிலே காணப்பட்ட விநயந்தான் அதற்குக் காரணம்.

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து”

என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதற்கு இலக்கியமாக இருந்தார் ஜமீன்தார் நான் என்ன ஆசாரியனா? வயசில் முதிர்ந்தவனா?
‘உத்தரவாகவேணும்’ என்று சொன்ன வார்த்தையிலே அவருடைய பெருந்தன்மையும், தமிழிலுள்ள கரை கடந்த அன்பும் தொனித்தன
‘பழங்காலத்தில் வீரமும் கொடையும் கல்வியுமுடையவராக இருந்த சிற்றரசர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ!’ என்று நான் நினைத்து உள்ளத்துள் அவரைப் பாராட்டினேன். அந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லத் தொடங்கினேன். அத்தகைய ரஸிகர்களும் இடமும் காலமும் கிடைக்கும்போது எனக்கு உண்டாகும் உத்ஸாகத்துக்கு அளவு ஏது? கருத்து, பதப் பொருள், விசேஷ உரை எல்லாம் சொல்லி எழுத்து முதலிய ஐந்து இலக்கணச் செய்திகளையும் அமைத்துச் சொன்னேன். எழுதுசித்திரம் போலிருந்து ஜமீன்தார் கேட்டார். மேலே இரண்டு பாடல்கள் நடந்தன. மணி பத்து அடித்தது. புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு ஜமீன்தார் எழுந்தார். “இதுவரையிலும் அனுபவிக்காத பேரானந்தத்தை இன்று அனுபவித்தேன்.நேரமாயிற்று போய்ப் போஜனம் செய்து கொள்ள வேண்டும்” என்று உபசரித்தார்.

மத்தியான்னம் எனக்குக் கிடைத்த விருந்தமுதத்தை தமிழ் நினைவோடு உண்டு மகிழ்ந்தேன். நான் கண்ட காட்சிகளெல்லாம்
கண்ணுக்கு விருந்தாக இருந்தன. அங்கே பழகிய மனிதர்களும், வேலை பார்க்கும் உத்தியோகஸ்தர்களும் மிகவும் திருத்தமாக இருந்தார்கள். மணிக் கணக்குப் பிசகாமல் ஒவ்வொரு காரியமும் நடந்து வந்தது. ஹஜார வாசலில் காலத்தைத் தெரிந்து கொள்வதற்கு மணற் கடிகாரம் வைத்திருந்தார்கள். இடங்களெல்லாம் திருத்தமாகவும் சுத்தமாகவும் இருந்தன. உத்தியோகஸ்தர்களிற் பெரும்பாலோர் தமிழை நன்றாகப் படித்தவர்கள்.

காலப் போக்கு

ஹிருதயாலய மருதப்பத் தேவருடைய காலப் போக்கை உணர்ந்து நான் வியப்படைந்தேன். விடியற்காலை நான்கு மணிக்கே அவர் எழுந்து விடுவார். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு பால் சாப்பிட்டு விட்டு 6 மணிக்குப் புறத்தே உலாவுவதற்குப் பரிவாரங்களுடன் புறப்படுவார். யானைக்கூடம், குதிரைப்பந்தி, காளைகள் கட்டுமிடம் எல்லாவற்றையும் பார்வையிட்டுக் கொண்டே செல்வார். ஊரைச் சுற்றியுள்ள சாலைகளில் ஒவ்வொரு சாலை வழியாகச் சென்று உலாவி வருவார். அந்தச் சாலைகளெல்லாம் அவராலேயே அமைக்கப்பட்டவை; இருபுறமும் மரங்களைப் பயிராக்கிச் சாலைகளை ஒருங்காக வைத்திருந்தார். தோட்டங்கள் நல்ல முறையில் வளர்க்கப்பெற்று
வந்தன. உலாவிவிட்டு வந்து எட்டு மணி முதல் பத்துமணி வரையில் தமிழ்ப்புலவர்களுடன் இருந்து தமிழ் நூல்களைப் படிப்பார். புதிய நூல்களைப் படிப்பதோடு பழைய நூல்களையும் பன்முறை படித்து இன்புறுவார். அவருடன் இருந்த வித்துவான்கள் நல்ல வித்துவப் பரம்பரையினர்; சில பிரபந்தங்களை இயற்றியிருக்கிறார்கள்; பல வருஷ காலமாக அவருடைய ஆஸ்தான வித்துவான்களாகவே இருந்தார்கள். பத்து மணிக்குமேல் கச்சேரிக் கட்டுக்குச் சென்று ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பார். பிறகு ஸ்நானம், ஆகாரம் முதலியவற்றை முடித்துக் கொண்டு மீட்டும் பிற்பகல் இரண்டு மணிக்குத் தமிழ் நூல் படிக்க உட்காருவார். நான்கு மணி வரையில்
படித்துவிட்டு ஆறு மணி வரையில் ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைப் பார்வையிடுவார். ஆறு மணிக்குமேல் தம்மைப் பார்க்க வந்தவர்களுக்குப் பேட்டி அளிப்பார். தம் குடிகளுடைய குறைகளை விசாரிப்பார். அவர்கள் அவற்றை ஓலையில் எழுதிய நீட்டுவார்கள். அவற்றையெல்லாம் பிறகு பார்த்து மறுநாள் தம் கருத்தைச் சொல்லுவார். வேற்றூரிலிருந்து வந்தவர்களுக்குச் சிறிதும் குறைவின்றி உபசாரம் நடைபெறும்.

ஆலயம்
                                  


மாலையில் ஆலயத்துக்குச் செல்வார். அங்கே நவநீதகிருஷ்ணசுவாமியின் ஆலயம் இருக்கிறது. ஹிருதயாலய மருதப்பத் தேவருடைய ஆட்சியில் நித்திய நைமித்திகங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.ஜமீன்தாருக்கு நவநீத கிருஷ்ணரே குலதெய்வம். ஆலயம் சிறிதாக இருந்தாலும் பெரிய கோயில்களுக்கு நடைபெறுவன போன்ற சிறப்புக்களை அங்கே பார்க்கலாம். பல வர்க்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேங்குழல் முதலிய பக்ஷியவகைகளும் கண்ணபிரானுக்கு நிவேதனம் செய்யப்படும். எல்லாம் புத்துருக்கு நெய்யாற் செய்வார்கள். ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும். தேங்குழல் பெரிய சந்தக்கல் அளவு இருக்கும். அந்தப் பிரசாதங்களை வெளியூரிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு எடுத்தனுப்பச் செய்வது ஜமீன்தார் வழக்கம்.

மாலையில் மருதப்பத் தேவர் சுவாமி தரிசனம் செய்வார் அங்கே நல்ல பாட்டுக்களைச் சில சங்கீத வித்துவான்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள்.

இவ்வளவு ஒழுங்காகவும் திறமையாகவும் அவர் நடத்தி வந்த ஆட்சியை வேறிடங்களில் நான் பார்த்ததில்லை. சிறிய ஜமீனாக இருந்தாலும்
அவர் அதற்குத் தம் ஆட்சி முறையால் பெருமையை உண்டாக்கினார். அவர் ஒரு பெரிய தேசத்தின் அதிபதியாக இருந்தால் எவ்வளவோ நல்ல
காரியங்களைச் செய்திருப்பாரென்று நான் எண்ணிப் பார்ப்பேன்.

உபசாரம்

மாலை நாலு மணிக்கு ஜமீன்தாரைக் கண்டேன். தமிழ்நூலின்பத்தை இருவரும் நுகர்ந்தோம். பழைய நூல்களைப் பற்றியும் பிற்காலத்து நூல்களைப் பற்றியும் நான் ஊக்கத்தோடு பேசினேன். ஜமீன்தாருடைய கூரிய தமிழறிவை உணர்ந்து மகிழ்ந்தேன். அவர் யாரைப் பற்றியும் குற்றம் கூறுவதே இல்லை. ஜமீன்தாருடைய மாமாவாகிய பெரியசாமித் தேவரென்பவருடைய தமிழ்ச்சுவடிகள் அரண்மனையில் இருந்தன அவற்றைப் பார்த்தேன். எனக்குப் பயன்படுவதாக ஒன்றும் இல்லை. சித்திரா நதி ஸ்நானமும், இனிய விருந்துணவும், அன்பில் ஊறி வெளிவரும் ஜமீன்தார் பேச்சும், தமிழின்பமும் சேர்ந்து அங்கே தங்கியிருந்த சிலநாள் வாழ்க்கையைத் தெய்வலோக வாசம் போலாக்கிவிட்டன. நான் ராஜோபசாரத்தைப் பெற்று இன்புற்றேன்; ராஜோபசாரமென்றது உபசாரவார்த்தையன்று; உண்மையிலேயே அது ராஜோபசாரந்தான். நான் அரசனல்லனென்ற ஒன்றுதான் குறை.

பிரியா விடை

என் வாழ்நாள் முழுவதும் அங்கே இருந்தாலும் எனக்குச் சலிப்பு வராது; ஜமீன்தாரும் உபசரிப்பதில் குறைவு செய்யமாட்டார். அது சாத்தியமா?
நான் உத்தியோகம் பார்ப்பதோடு தமிழ்ச் சுவடிக்காக ஊரெல்லாம் அலைய வேண்டிய சொந்த உத்தியோகம் வேறு உள்ளதே. ஒரு நாள், பிரிய
வேண்டுமே என்ற வருத்தத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு ஜமீன்தாரிடம் பத்துப் பாடல்கள் கூறி விடை கேட்டேன்.

“. . . . . .ஒருவஞ்சிக் காண்டந், தேடத், தாரளவு புய வீர கேரளபூபால விடை தருவாய் மன்னோ”

என்பது மட்டும் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. அவர் பின்னும் சிலநாள் இருந்து போக வேண்டுமென்று சொன்னார். நான வற்புறுத்தவே வேறு வழியின்றி விடை அளித்தார். ஒரு சால்வையும் சில உயர்ந்த வஸ்திரங்களும் வழிச்செலவுக்குப் பணமும் வழங்கினார்.

ஒரு நாள் மாலையில் விடை பெற்றுக் கொண்டேன். அப்போது அவர், “இங்கிருந்து வண்டியையும் சமையற்காரனையும் திட்டம் செய்து
பாத்திரங்களும், சாமான்களும் அனுப்புகிறேன். நீங்கள் எங்கெங்கே போக வேண்டுமோ அவ்விடங்ளுக்கெல்லாம் செல்லலாம்” என்றார். “நான் போகிற இடங்களிலெல்லாம் சமையற்காரனை வைத்துக் கொண்டு விருந்து சாப்பிடுவது முடியாத காரியம். அதற்கேற்ற வசதி இராது. பல இடங்களில் கிடைத்ததைக் கிடைத்த நேரத்தில் உண்டு விட்டு ஏடு தேடுவேன். பட்டினி கிடக்க நேர்ந்தாலும் நேரும். எனக்கே இப்படி இருக்கும்போது வண்டி மாடு, வண்டியாள், சமையற்காரன் இவ்வளவு பரிவாரங்களையும் வைத்துக்கொண்டால் என் காரியம் நிறைவேறாது, திருக்குற்றலாம் வரையில் செல்ல வண்டி அனுப்ப ஏற்பாடு செய்தாற் போதும்” என்று கேட்டுக் கொண்டேன். அப்படியே ஏற்பாடு செய்தார். மறுநாள் விடியற்காலையில் புறப்படவேண்டும்.

விடை பெற்ற பிறகு ஜாகைக்குச் சென்றேன். அன்றிரவு பத்து மணிக்கு வழக்கம்போல் எனக்கு ஒருவர் நன்றாகக் காய்ச்சிய பால் கொணர்ந்து தந்தார். தேன்பாகும், குங்குமப்பூவும் சேர்த்துக் குழம்பு போலக் காய்ச்சிய அதைப் பருகும்போது, “இவ்வளவு உபசாரத்தை நாம் எங்கே அடையப் போகிறோம்! இவ்வளவு அன்புடையவர்களை எப்படிப் பிரிவது!” என்ற நினைவு எழவே என் கண்களிலிருந்து பல பலவென்று நீர்த்துளிகள் உதிர்ந்தன.
-----------------------------------------------------------------------------

வீர கேரளம் புதூரென்பது ஜமீன்தார் இருந்த ஊரின் பெயர்.

மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன். வண்டி சித்தமாக இருந்தது.மறுபடியும் ஒருமுறை ஜமீன்தாரைப் பார்க்க வேண்டுமென்று தோற்றியது,
போய்ப் பார்த்தேன். என்னைக் கண்டவுடன் அவர் திடுக்கிட்டு, “என்ன விசேஷம்? வண்டி வரவில்லையா?” என்றார்.

“எல்லாம் வந்து விட்டன. சமுகத்தைப் பிரிவதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. தமிழ்த் தொண்டு முன்னே இழுக்கிறது. ராத்திரி நான்
பால் அருந்தியபோது சமுகத்தின் அன்பை நினைந்து மனங்கசிந்தேன்.மறுபடியும் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்ற ஆசையால் வந்தேன்.
விடைபெற்றுக் கொள்ளுகிறேன்” என்று சொல்லி நின்றேன்.

“நமக்கும் வருத்தமாகவே இருக்கிறது. எந்தச் சமயத்தில் ஓய்வு நேருமோ அப்போதெல்லாம் வந்து இங்கே தங்கி எங்களுக்குத் தமிழமுதை
ஊட்டலாம்” என்று அவர் அன்பு கனியச் சொன்னார்.

விடை பெற்றுப் பிரிந்தேன். அன்று அவரைக் கண்டதுதான்; பிறகு அவரைக் காணமுடியாமல் விதி செய்து விட்டது.

என் உள்ளத்தை ஹிருதயாலய மருதப்பத் தேவரிடம் வைத்து விட்டுத் திருக்குற்றாலத்தை அடைந்தேன்.

No comments:

Post a Comment